நகராட்சி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
கவுன்சிலர்களின் குற்றச்சாட்டை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பேரணாம்பட்டு நகரமன்ற கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் அப்துல் ஹாமீத், நகராட்சி வரவு செலவு கணக்கை காட்டுமாறும், ரூ.2 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கவுன்சிலர் முஹம்மில் அஹம்மத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர் தன்விரா பேகம், சுயேட்சை கவுன்சிலர் அதீக்குர் ரஹ்மான் ஆகிய 4 பேரும் வரவு செலவு கணக்கு கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் பேரணாம்பட்டு நகராட்சி ஊழியர்கள் 26 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என 46 பேர் அலுவலக வாயிலில் அமர்ந்து ரூ.2 கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறிய கவுன்சிலர்களை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு நகராட்சி தலைவர் பிரேமா வெற்றிவேல், துணைத் தலைவர் ஆலியார்ஜூபேர் அஹம்மத் மற்றும் கவுன்சிலர்கள் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். சுமார் 3 மணி நேரம் நடந்த தர்ணா போராட்டத்தை இரவு 7.30 மணியளவில் நகராட்சி ஊழியர்கள் கை விட்டு கலைந்து சென்றனர்.