'ஊராட்சி மணி' அழைப்பு மையம் - இன்று திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!


ஊராட்சி மணி அழைப்பு மையம் - இன்று திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
x

ஊராட்சி மணி திட்டத்திற்கான அழைப்பு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

சென்னை,

அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் 'ஊராட்சி மணி' அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் புகார் தீர்க்கும் பொருட்டு ஊராட்சி மணி அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க 155340 என்ற மைய அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊராட்சி மணி என்ற பெயர், மனுநீதிச் சோழனின் கதையை முன்னோடியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறைகளை உடனடியாகத் தீர்ப்பதை இது உறுதி செய்கிறது. மக்களுக்கு பாரபட்சமற்ற, சமமான சேவையை வழங்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் கட்டணமில்லா சேவை தொடங்கப்படுகிறது. அழைப்பு மைய நிர்வாகி மூலமாகவோ, இணையதளம் வாயிலாகவோ குறைகளை உடனடியாக தீர்க்கும்வகையில், உரிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

இதுதவிர, சமூக வலைதளங்கள் மூலமும் குறைகள் பெறப்பட உள்ளன. புகார்களின் தீவிரத்தன்மை அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டு, உரிய தீர்வு காணப்படும். அதேபோல, சமூக ஊடகங்கள் மூலம் பெறப்படும் புகார்களும் குறைதீர் மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றுக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


Next Story