காவேரிப்பட்டணம் அருகேகல்லால் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி விவசாயி சாவுகொலை வழக்காக மாற்றம்; முன்னாள் ராணுவ வீரர் கைது
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே நிலத்தகராறில் கல்லால் தாக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார் முன்னாள் ராணுவ வீரரை கைது செய்தனர்.
நிலத்தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் பனகமுட்லு அருகே உள்ள பில்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 60). விவசாயி. இவருடைய மகன் வினோத் (27). அதே பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (37). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய சகோதரர் சின்னசாமி (34). ரேஷன் கடை விற்பனையாளர். இந்த நிலையில் பரந்தாமனுக்கும், சம்பத்குமாருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி பில்லகொட்டாய் கிராம மக்கள் இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.
கல்லால் தாக்குதல்
இதில் சம்பத்குமார் மற்றும் சகோதரர் சின்னசாமி ஆகியோர் சேர்ந்து பரந்தாமனை கல்லால் தாக்கினர். இதில் அவருக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் விசாரணை நடத்தி சம்பத்குமார், சின்னசாமி ஆகிய 2 பேர் மீதும் ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பத்குமாரை கைது செய்தனர்.
கொலை வழக்கு
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரந்தாமன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக காவேரிப்பட்டணம் போலீசார் மாற்றி உள்ளனர். மேலும் தலைமறைவான சின்னசாமியை தேடி வருகிறார்கள்.