கயிற்றால் கழுத்தை இறுக்கி மகனை கொன்ற தம்பதி


கயிற்றால் கழுத்தை இறுக்கி மகனை கொன்ற தம்பதி
x

மதுரையில் மதுபோதையில் தகராறு செய்த மகனை, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை


மதுரையில் மதுபோதையில் தகராறு செய்த மகனை, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதை

மதுரை சொக்கலிங்கநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 56). இவருடைய மனைவி குருவம்மாள் (50). இவர்கள் அந்த பகுதியில் வடை கடை நடத்தினர். இவர்களது மூத்த மகனுக்கு திருமணமாகி மாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

2-வது மகன் மாரிச்செல்வம் (27). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டாராம். வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று மது குடித்தாராம். மாரிச்செல்வத்தை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

இதனால், அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.. மேலும், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு, மாரிச்செல்வம் அதிக அளவில் மது அருந்திவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து அவரை, தந்தை நாகராஜன் கண்டித்தார். அதில் ஆத்திரம் அடைந்த அவர், தந்தையை தாக்கி உள்ளார். இதனை தடுக்க வந்த தாயையும் கீழே தள்ளி விட்டுள்ளார்.

பின்னர் அவர் வீட்டின் அறையில் படுத்து தூக்கி விட்டார். தினமும் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபடும் மகனின் செயலை நினைத்து ஆத்திரம் அடைந்த பெற்றோர், அவரை கொலை செய்ய முடிவு செய்தனர். கயிற்றை எடுத்து மதுபோதையில் இருந்த மாரிச்செல்வத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

போலீசில் சரண்

அதன்பின்னர் அவர்கள் இருவரும், எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகனை கொன்றுவிட்டதாக கூறி சரண் அடைந்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாரிச்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மாடி வீட்டில் இருந்த மூத்த மகனிடமும் இது குறித்து விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜன், குருவம்மாள் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story