பூந்தமல்லியில் கள்ளக்காதலியின் 18 வயது மகளை கொலை செய்தவர் கைது - மும்பையில் பதுங்கி இருந்தபோது சிக்கினார்


பூந்தமல்லியில் கள்ளக்காதலியின் 18 வயது மகளை கொலை செய்தவர் கைது - மும்பையில் பதுங்கி இருந்தபோது சிக்கினார்
x

பூந்தமல்லியில் இளம்பெண் கொலை வழக்கில் தாயின் கள்ளக்காதலன் மும்பையில் கைது செய்யப்பட்டார். ஆசைக்கு இணங்க மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை

பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த பெண், கணவரை விட்டு பிரிந்து தனது 18 வயது மகளுடன் வசித்து வந்தார்.

இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு ராஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவர் அடிக்கடி அந்த பெண் வீட்டுக்கு வந்து சென்றார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணின் 18 வயது மகள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க கம்மல், வெள்ளி கொலுசு மாயமாகி இருந்தது. நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கற்பழிக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதுபற்றி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கடைசியாக அந்த பெண்ணின் கள்ளக்காதலன் ராஜூதான் அவரது வீட்டுக்கு வந்து சென்றது தெரிந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர்.இந்தநிலையில் மும்பையில் பதுங்கி இருந்த ராஜூவை தனிப்படை போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது போலீசாரிடம் ராஜூ அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நான், மனைவியை பிரிந்து சென்னையில் தனியாக வசித்து வந்தேன். அதன்பிறகு அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அவ்வப்போது அவரது வீட்டுக்கு வந்து சென்றேன்.

சம்பவத்தன்று அந்த பெண் வீட்டுக்கு சென்றபோது அவரது மகள் மட்டும் தனியாக இருந்தாள். அவளை எனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். அவள் மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் அவளை கற்பழித்து விட்டு, நகைக்காக கொலை நடந்ததுபோல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் அணிந்திருந்த கம்மல், கொலுசு ஆகியவற்றை திருடி விட்டு மும்பைக்கு தப்பிச்சென்றேன். ஆனாலும் என்னை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story