நாமக்கல்ஆஞ்சநேயர் கோவிலில் நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேகம்அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் முடிவு


நாமக்கல்ஆஞ்சநேயர் கோவிலில் நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேகம்அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 17 July 2023 7:00 PM GMT (Updated: 17 July 2023 7:01 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு ரூ.33 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் வர்ணம் பூசும் பணி மற்றும் சாளக்காரம் கட்டும் பணியை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.

மேலும் தட்டோடு பதிக்கும் பணி, விநாயகர் கோவில் மராமத்து பணி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் படிக்கட்டுகளுக்கு பித்தளை கவசம் சாற்றும் பணிகளை தனிநபர்களின் நிதி பங்கீட்டில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கப்பட்டது. தற்போது இவற்றில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கும்பாபிஷேகம் நடத்த முடிவு

அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கோவில் செயல் அலுவலர் இளையராஜா மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர்.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் இளையராஜா கூறியதாவது:-

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளோம். அறங்காவலர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பி அனுமதி பெற உள்ளோம். அதற்கு பிறகு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story