நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 75-வது சுதந்திர தின விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது


நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில்  75-வது சுதந்திர தின விழா  இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது
x

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 75-வது சுதந்திர தின விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள் சார்பில் சுதந்திர தின விழா இனிப்பு வழங்கி கொண்டாப்பட்டது.

நாமக்கல், குமாரபாளையம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ராமலிங்கம் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதேபோல் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்த ராமலிங்கம் எம்.எல்.ஏ. பள்ளியில் நடைபெற்ற பேச்சு, கவிதை, வினாடி வினா, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். இதில் மாநில விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் கைலாசம், நகர்மன்ற உறுப்பினர்கள் தனசேகர், சரவணன், பாலுச்சாமி, தேவராஜ், கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், டாக்டர். விஜய் ஆனந்த், தலைமை ஆசிரியர் பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் குடும்பநல நீதிபதி பாலகுமார், கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரையா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் வடிவேல் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணி, முன்னாள் நகர செயலாளர் குமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் நடந்த விழாவில் நகர்மன்ற தலைவர் விஜய் கண்ணன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரவி தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மலர்விழி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். குமாரபாளையம் கோட்டைமேட்டில் உள்ள நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்.

திருச்செங்கோடு, பள்ளிபாளையம்

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாப்பட்டது. திருச்செங்கோடு ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். இதில் நகராட்சி தலைவர் நளினி சுரேஷ் பாபு, கொ.ம.தே.க. மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், மாவட்டத் தலைவர் சேன்யோ குமார், மாவட்ட பொருளாளர் தங்கமுத்து, நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், இளைஞர் அணி வெற்றி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்செங்கோடு நகராட்சியில் நடந்த விழாவில் தலைவர் நளினி சுரேஷ் பாபு தேசிய கொடி ஏற்றி நகரின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். இதில் நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம், துணைத்தலைவர் கார்த்திகேயன், முன்னாள் நகர்மன்ற தலைவர் நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தின் சார்பில் சி பிரிவில் விளையாடி பரிசு பெற்ற நந்திதாவுக்கு பாராட்டி பரிசுகளை எம்.எல்.ஏ. ஈஸ்வரன் வழங்கினார்.

பள்ளிபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய சேர்மன் தனலட்சுமி செந்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கருப்பண்ணன் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் தங்கவேல் தேசிய கொடி ஏற்றினார். முன்னாள் நகராட்சி சேர்மன் குமார் இனிப்பு வழங்கினார்.

பள்ளிபாளையம் ஆவரங்காடு தொடக்கப்பள்ளியில் நகர தி.மு.க. செயலாளர் குமார் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். ராஜவீதியில் உள்ள ஜூம்மா சுன்னத் மசூதியில் முத்தவல்லி குலோப்ஜான் தேசிய கொடி ஏற்றினர். இதேபோல் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம், அக்ரஹாரம் அரசு தொடக்கப்பள்ளி, ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கண்டிப்புதூர் அரசு தொடக்கப்பள்ளி, காவிரி ஆர்.எஸ். அரசு தொடக்கப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி

எருமப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை பேரூராட்சி தலைவர் பழனியாண்டி ஏற்றினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல், துணைத்தலைவர் ரவி மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன. எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா தேசிய கொடி ஏற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணாளன், பிரபாகரன் மற்றும் துணைத்தலைவர் லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் பாப்பு தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் அட்மா குழு சேர்மன் அசோக்குமார், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜவகர், பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் மற்றும் இனிப்பு வழங்கினர். இதில் தலைமை ஆசிரியர் சுந்தரம், பேரூராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம், அத்தனூர்

ராசிபுரம் நகராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி ேபசினார். பின்னர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு நகராட்சி தலைவர், ஆணையாளர் அசோக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர், நகர்மன்ற துணைத்தலைவர் கோமதி ஆனந்தன், நகராட்சி பொறியாளர்கள் கிருபாகரன், கார்த்திக், தூய்மை அலுவலர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேரூராட்சி தலைவர் சின்னுசாமி தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தியமைக்கு நன்றி தெரிவித்தார். இதில் துணைத்தலைவர் கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொல்லிமலை

கொல்லிமலை ஒன்றியம் பைல்நாடு ஊராட்சி நவக்காடு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சவுந்தரம் ஈஸ்வரன் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். இதில் துணைத்தலைவர் செல்வராஜ், உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, கவிதா செந்தில் உள்பட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story