நாமக்கல் சிலுவம்பட்டி ஊராட்சியில் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


நாமக்கல் சிலுவம்பட்டி ஊராட்சியில்  குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்  போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:47 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் சிலுவம்பட்டி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிலுவம்பட்டி ஊராட்சியில் ரெட்டியார் தெரு உள்ளது. இங்கு 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் ரெட்டியார் தெரு, வெள்ளாளர் தெரு பகுதிகளில் உள்ள சுமார் 350 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இதனிடையே கடந்த 15-ந் தேதி மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை ஊராட்சி தலைவர் பழனிவேல் மற்றும் சிலர் துளையிட்டு சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே மனு அளித்து இருந்தனர். அப்போது 7 நாட்களில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாலை மறியல்

ஆனால் இதுவரை பொதுமக்களின் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சேதப்படுத்திய ஊராட்சி தலைவர் பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மறியலை கைவிட்டு அதிகாரிகளை சந்தித்து தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் தொடர்பாக ஊராட்சி தலைவரிடம் விளக்கம் கேட்பதோடு, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story