நாமக்கல்லில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நகராட்சி பணியாளருக்கு ரூ.1,000 அபராதம் போலீஸ் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டி சென்றதால் பரபரப்பு


நாமக்கல்லில் ஹெல்மெட் அணியாமல் சென்ற  நகராட்சி பணியாளருக்கு ரூ.1,000 அபராதம்  போலீஸ் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டி சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நகராட்சி பணியாளருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் போலீஸ் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசாரிடம் வாக்குவாதம்

நாமக்கல்லில் போக்குவரத்து போலீசார் தினசரி வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை நாமக்கல் நகர போலீஸ் நிலையம் அருகே திருச்சி சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த நாமக்கல் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் கந்தசாமி என்பவரை போலீசார் தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்துள்ளனர். இதையடுத்து அவர் தான் நகராட்சி பணியாளர் என்றும், தன் மீது எவ்வாறு வழக்குப்பதிவு செய்வீர்கள் என்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இருப்பினும் கந்தசாமி மீது ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கியதாக வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போக்குவரத்து போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்து உள்ளனர்.‌ இதையடுத்து வேறு வழியின்றி, அவரும் அபராத தொகையை கட்டிவிட்டு சென்று விட்டார்.

குப்பைகளை கொட்டியதால் பரபரப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பிற்பகலில் போலீசார் இல்லாத நேரத்தில் நாமக்கல் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு நகராட்சி பேட்டரி வாகனத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் மூக்கை பிடித்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்து போலீசார் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் உடனடியாக அங்கு வந்த துப்புரவு பணியாளர்கள் குப்பையை அள்ளி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒழுங்கு நடவடிக்கை

இதுகுறித்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதாவிடம் கேட்டபோது, சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். துப்புரவு மேற்பார்வையாளர் கந்தசாமி போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டி சென்றதாக புகார் வந்துள்ளது. அது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு 'மெமோ' வழங்கப்பட்டு உள்ளது. குப்பை கொட்டியது உறுதியானால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்றார்.


Next Story