நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 23-ந் தேதி ஜெயந்தி விழா 1 லட்சத்து 8 வடைமாலை அணிவிக்க ஏற்பாடு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 23-ந் தேதி ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. விழாவில் 1 லட்சத்து 8 வடைமாலை சாத்துப்படி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆஞ்சநேயர் கோவில்
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினசரி சாமிக்கு 1,008 வடைமலை அலங்காரம் நடைபெறும்.
தொடர்ந்து நல்லெண்ணெய், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் மலர் அலங்காரம் செய்யப்படும். இல்லையெனில் வெள்ளிக்கவசம் அல்லது தங்ககவசம் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும். மாலையில் தங்கத்தேர் உற்சவம் மற்றும் சந்தனக்காப்பு, வெண்ணெய்காப்பு, முத்தங்கி போன்ற அலங்காரம் நடைபெறும்.
1 லட்சத்து 8 வடைமாலை
ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற 23-ந் தேதி ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது. காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங், ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பட்டாச்சாரியார் ரமேஷ் தலைமையிலான குழுவினர் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் வடை தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.