நாமக்கல்லில், 28-ந் தேதிநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான பந்தல், மேடை அமைக்கும் பணிகலெக்டர், எம்.பி. தொடங்கி வைத்தனர்

நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் வருகிற 28-ந் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேச உள்ளார்.
மேலும் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதோடு, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்து வைக்கிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே பொம்மைகுட்டைமேட்டில் அரசு விழாவுக்காக பந்தல் மற்றும் மேடை அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, உதவி கலெக்டர் மஞ்சுளா, தி.மு.க. மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் வக்கீல் இளங்கோவன், மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி மற்றும் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் 28-ந் தேதி நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல்லில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். இதற்காக நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ரெசிடென்சி ஓட்டல் வளாகத்தில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணியை ராஜேஸ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் கலாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






