7-வது வார்டுமயானத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?


7-வது வார்டுமயானத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி 7-வது வார்டில் ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

7-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 7-வது வார்டில் நல்லிபாளையம் கிழக்கு மற்றும் மேற்கு வீதி, மாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் காலனி, அம்பேத்கர் காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. 2 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. கால்நடை மருத்துவமனை ஒன்றும் உள்ளது.

நல்லிபாளையம் ஊராட்சியின் ஒரு பகுதியை பிரித்து இந்த வார்டு உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த வார்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் அநேகம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வார்டில் 1,306 ஆண்கள், 1,452 பெண்கள் என மொத்தம் 2,758 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணபிரியா வெற்றி பெற்றார்.

பாதாள சாக்கடை வசதி

நாமக்கல் நகராட்சியை பொறுத்தவரையில் புதிதாக இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளில் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்படவில்லை. இதில் 7-வது வார்டும் அடங்குகிறது. இதனால் அப்பகுதிகளில் கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது. பாதாள சாக்கடைக்கு அரசு அனுமதி அளித்து உள்ள நிலையில், அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த வார்டில் நல்லிபாளையத்தில் இருந்து பொன்நகர் செல்லும் சாலையில் ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தும் மயானம் உள்ளது. இந்த மயானம் அடிப்படை வசதி இன்றி காணப்படுகிறது. எனவே அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதவிர சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என்கிற கோரிக்கையும் இருந்து வருகிறது.

பொதுக்கழிப்பிடம்

இதுகுறித்து அம்பேத்கர் நகரை சேர்ந்த நந்தினி கூறியதாவது:-

எங்கள் வார்டில் கடந்த ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு இதுவரை திறக்காமல் கழிப்பிடம் ஒன்று உள்ளது. இதனால் பெண்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே பொதுக்கழிப்பிடத்தை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் அனைத்து குறுக்கு சந்துகளிலும் மண்சாலையே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. தெருக்கள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே தார்சாலையாக மாற்றி தர வேண்டும்.

இதேபோல் எங்கள் பகுதிக்கு வரும் வழியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் பாம்பு நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. எனவே தெருவிளக்கு வசதி முழுமையாக செய்து தர வேண்டும்.

அடிப்படை வசதிகள்

திருவள்ளுவர் காலனியை சேர்ந்த ரமேஷ் :-

ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தும் மயானம் புதர்மண்டி காணப்படுகிறது. இவற்றை அகற்றி விட்டு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். நிழற்குடை அமைத்து கொடுத்தால் ஈமகாரியங்களுக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.

கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நல்லிபாளையம் கிழக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை வசதியுடன் தார்சாலை அமைக்க வேண்டும். சமுதாய கூடம் அமைத்து கொடுத்தால் விஷேச நிகழ்ச்சிகளை நடத்த நன்றாக இருக்கும். பொழுதுபோக்கு பூங்காவுடன் நடைபயிற்சிக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். ஊர்குட்டையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்

இதுகுறித்து 7-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரியா கூறியதாவது:-

நான் பொறுப்பேற்ற பிறகு நல்லிபாளையம் கண்ணன் டீக்கடை சந்து, ஆயில்மில் சந்து, துரைராஜ் காம்பவுண்ட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தார்சாலை அமைத்து கொடுத்து உள்ளேன். திருவள்ளுவர் காலனியில் 6 வீதிகளிலும், மாரியம்மன் கோவில் வீதியிலும் 'பேட்ஜ் ஒர்க்' முடிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுவர் காலனியில் சுமார் 8 ஆண்டுகளாக பாதை வசதி இல்லாததால் பயன்படுத்தபடாமல் இருந்த பொது கழிப்பிடத்திற்கு புதிதாக பாதை வசதி ஏற்படுத்தி திறக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளேன். புதிய குடிநீர் திட்டத்தை பொறுத்த வரையில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது.

விரைவில் பாதாள சாக்கடை பணி தொடங்க இருக்கிறது. அப்பணி நிறைவடைந்தால் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும். பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக ஊர்குட்டையை சுற்றி கம்பிவேலி அமைத்து சுமார் ரூ.45 லட்சம் செலவில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சமுதாய கூடம் கட்டவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story