நாமக்கல்லில் போலீஸ் என கூறிமூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ்மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நாமக்கல்லில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச்சங்கிலியை அபேஸ் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரத்த பரிசோதனை
நாமக்கல் மாவட்டம் பாச்சல் அருகே உள்ள கடந்தப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி சரோஜா (வயது 67). இவர் நேற்று முன்தினம் நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள அண்ணா நகரை சேர்ந்த உறவினரான பாக்கியலட்சுமி (71) என்பவரின் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் சரோஜாவுக்கு ரத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை பரிசோதனை செய்வதற்காக அப்பகுதியில் உள்ள தனியார் ஆய்வகத்திற்கு சென்றனர். அங்கிருந்து பொய்யேரிக்கரை வழியாக அண்ணாநகர் நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தங்களை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டு, வயதான காலத்தில் இப்படி கழுத்தில் நகைகளை அணிந்து செல்வது பாதுகாப்பு இல்லை என கூறி உள்ளனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த ஜூவல்லரியில் பயன்படுத்தும் பர்சை எடுத்து அதில் நகைகளை போட சொல்லி உள்ளனர்.
6 பவுன் நகை அபேஸ்
சரோஜா தான் கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். இதேபோல் பாக்கியலட்சுமியும் அணிந்து இருந்த நகையை கழற்றி கொடுத்துள்ளார். அதில் பாக்கியலட்சுமி அணிந்து இருந்த நகை கவரிங் என்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் அதை பர்சில் போட்டு விட்டனர். சரோஜா அணிந்து இருந்த 6 பவுன் நகையை அபேஸ் செய்து விட்டு பர்சை சரோஜாவிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
சிறிது தூரம் சென்றதும் சரோஜாவுக்கு சந்தேகம் வந்தது. எனவே அவர் பர்சை திறந்து பார்த்து உள்ளார். அப்போது அதில் தனது 6 பவுன் தங்க நகை இல்லை என்பதை அறிந்தார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.