நாமக்கல் மாவட்டத்தில்பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம்


நாமக்கல் மாவட்டத்தில்பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம்
x
தினத்தந்தி 1 March 2023 7:00 PM GMT (Updated: 1 March 2023 7:01 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது.

செய்முறை தேர்வு தொடக்கம்

தமிழகத்தில் மார்ச் மாதம் 13-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வும், 14-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வும் தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் 198 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து பிளஸ்-2 தேர்வை இந்த ஆண்டு 19 ஆயிரத்து 877 பேரும், பிளஸ்-1 தேர்வை 17 ஆயிரத்து 810 பேரும் எழுத விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து தேர்வு மையங்களிலும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தேர்விற்கான விடைத்தாள்கள் அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு மாணவ, மாணவிகளின் விவரங்கள் அடங்கிய முகப்பு பக்கம் விடைத்தாளுடன் இணைத்து தைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. இதற்காக மாவட்டம் முழுவதும் 147 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

745 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனி அட்டவணைகளில் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு பணிகளில் அகத்தேர்வர்கள் மற்றும் புறத்தேர்வாளர்களாக 745 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வை நடத்த அரசு பள்ளி ஆசிரியர்களும், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளுக்கும் தேர்வு நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். செய்முறை தேர்வு வருகிற 7-ந் தேதிக்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story