கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் 45 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு


கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி:  நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்  45 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:45 PM GMT)

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் 45 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

நாமக்கல்

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நோய் பரவலை தடுக்க 45 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பறவை காய்ச்சல்

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5 கோடிக்கும் மேல் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகள், வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

குறிப்பாக கேரளாவுக்கு மட்டும் தினசரி 1 கோடி முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது. முக்கிய விற்பனை மையமாக விளங்கும் கேரளாவில் அடிக்கடி பறவை காய்ச்சல் கண்டறியப்படுவதால் கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைகிறது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வாழுத்தனம் நகராட்சி பகுதியில் வாத்துகளை பறவை காய்ச்சல் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே கேரளா முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் பகுதியிலும் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கிருமிநாசினி

நாமக்கல் பகுதியில் இருந்து அதிகளவில் சரக்கு வாகனங்கள் கேரளாவுக்கு கோழி மற்றும் முட்டைகளை ஏற்றி செல்வதால் இங்கும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோழிப்பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து கோழிகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். கோழிப்பண்ணைகளுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்து அனுமதிக்க வேண்டும்.

வெளியிடங்களில் இருந்து வரும் முட்டை அட்டைகளை கிருமிநாசினி தெளித்து அதன் பிறகு கோழிப்பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும். கோழிப்பண்ணைகளில் உள்ள குப்பைகளை நல்ல முறையில் பராமரிப்பது, புழுக்கள் உற்பத்தியாகாமல் பாதுகாத்து அதன் மூலம் வன பறவைகளான கொக்கு, நாரை போன்றவற்றை கோழிப்பண்ணைகளுக்குள் வராமல் பாதுகாக்க வேண்டும்.

கொள்முதல் செய்யக்கூடாது

கோழிப்பண்ணையாளர்கள் எக்காரணம் கொண்டும் முட்டை, தீவனம், தீவன மூலப்பொருட்கள், கோழிக்குஞ்சுகள், கோழி குப்பை போன்ற பொருட்களை அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கண்டிப்பாக கொள்முதல் செய்யக்கூடாது.

கோழிப்பண்ணைகளில் இயல்புக்கு மாறான இறப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வெளிஆட்கள், கோழிப்பண்ணைகளுக்குள் பார்வையாளர்களை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

45 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

நாமக்கல் மாவட்டம் முழுவதும் பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க 45 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு பண்ணைகளுக்கும் சென்று உயிரி பாதுகாப்பு முறை பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைப்பதற்கு அறிவுறுத்தி வருகின்றனர். கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளையும் கண்காணித்து வருகின்றனர்.


Next Story