சென்னையில் தேசிய காகித தின விழிப்புணர்வு பேரணி


சென்னையில் தேசிய காகித தின விழிப்புணர்வு பேரணி
x

தேசிய காகித தினத்தை முன்னிட்டு, சென்னை காகித வியாபாரிகள் சங்கம் சார்பில் மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சென்னை

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 1-ந்தேதி தேசிய காகித தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தேசிய காகித தினத்தை முன்னிட்டு, சென்னை காகித வியாபாரிகள் சங்கம் சார்பில் மெரினா கடற்கரையில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. சங்கத்தின் தலைவர் ஜி.பாலாஜி, செயலாளர் என்.அண்ணாமலை மற்றும் தேசிய காகித வியாபாரிகள் சங்கத்தின் துணைத்தலைவர் பி.ஸ்ரீராம் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைந்து வழிநடத்தினர்.

கலங்கரை விளக்கம் முதல் விவேகானந்தர் இல்லம் வரை நடந்த இந்த பேரணியில் காகிதத்தின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, மறுசுழற்சி செய்யக்கூடிய, மக்கும் தன்மை கொண்ட காகிதத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும். அதுவே நாளைய சமூகத்துக்கு நல்லது என்று பொதுமக்களிடம் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.

இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் அண்ணாமலை கூறுகையில், "தேசிய காகித தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பேரணி நடந்தது. காகிதத்தின் அவசியம் குறித்து மக்கள் அறிந்துகொள்வது அவசியம் ஆகும்'', என்றார்.


Next Story