கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்


தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

நவராத்திரி விழாவின் முதல் நாளையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தேனி

நவராத்திரி விழா

ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா கோவில்களில் சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்படி, விழாவின் முதல் நாளான நேற்று கம்பம் கிராமச்சாவடி தெருவில் உள்ள காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் காமாட்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

மேலும் கோவிலில் பல வகையான கொலு பொம்மைகள் வைக்கப்படுள்ளன. இதில் வளைகாப்பு நிகழ்ச்சி, நதியில் பெண்கள் நீராடுதல், திருமண நிகழ்ச்சி, இசை கலைஞர்கள், 63 நாயன்மார்கள், சித்தர்கள், கிருஷ்ணன், விநாயகர், திருப்பதி, முருகன் உள்பட பல்வேறு சாமி சிலைகள் மற்றும் கொலு பொம்மைகள் இடம்பெற்றிருந்தன.

சிறப்பு வழிபாடு

நவராத்திரி விழாவையொட்டி, போடியில் உள்ள பராசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் அம்மன் காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், சீனிவாச பெருமாள் கோவில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நவராத்திரி விழா நடந்தது. மேலும் விழாவையொட்டி கோவில்களில் மின்னொளியில் ஜொலித்தன. உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் கோவில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில் உப்புக்கோட்டையில் பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும், வீரபாண்டியில் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ஞானம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story