நாயக்கர் கால கருப்பசாமி சிலை கண்மாயில் கண்டெடுப்பு


நாயக்கர் கால கருப்பசாமி சிலை கண்மாயில் கண்டெடுப்பு
x

மதுரையில் நாயக்கர் காலத்தை சேர்ந்த கருப்பசாமி சிலை கண்மாயில் கண்டெடுக்கப்பட்டது.

மதுரை

மதுரையில் நாயக்கர் காலத்தை சேர்ந்த கருப்பசாமி சிலை கண்மாயில் கண்டெடுக்கப்பட்டது.

கருப்பசாமி சிலை

மதுரை சிறுதூர் கண்ணனேந்தல் பகுதிக்கு உட்பட்ட பறையாத்திகுளம் கண்மாய் அருகே பழங்கால கருப்பசாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தண்ணீரில் மூழ்கிக் கிடந்த இந்த சிலையை கண்ணனேந்தல் கிராமத்தை சேர்ந்த பொன்பாலகிருஷ்ணன், ஜெகநாதன், பிரகாஷ், முத்துராமன் ஆகியோர் பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த சிலை குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த சிலை குறித்து தொல்லியல் கள ஆய்வாளர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் பரவலாக காணப்படும் வழிபாட்டு முறைகளில் கருப்பசாமி வழிபாடும் ஒன்று. கிராம காவல் தெய்வமான வழிபாடுகளில் இவரை கருப்பசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். விளைநிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பசாமியை வழிபடுகின்றனர்.

நாயக்கர் காலம்

விளைநிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லை கருப்பன் என்று கருதி ஆண்டுக்கொருமுறை சேவலைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம். தற்போது கண்டெடுக்கப்பட்ட சிலை நின்ற கோலத்தில், தலையில் பெரிய தலைப்பாகை, நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கு கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் வடிவ அமைப்பை பொறுத்து நாயக்கர் காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இந்த சிலை குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னர் முழு தகவல்கள் தெரியும் என்றனர்.


Related Tags :
Next Story