பெரியகுளம் அருகே மின்வேலியில் சிக்கி சிறுத்தை சாவு


பெரியகுளம் அருகே  மின்வேலியில் சிக்கி சிறுத்தை சாவு
x

பெரியகுளம் அருகே சோலார் மின் வேலியில் சிக்கி சிறுத்தை இறந்து கிடந்தது.

தேனி

வன அதிகாரியை தாக்கிய சிறுத்தை

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த கைலாசநாதர் மலைக்கோவில் அருகில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த 27-ந்தேதி சோலார் மின்வேலியில் ஒரு சிறுத்தை சிக்கியது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனர். அது சுமார் 2 வயதுள்ள ஆண் சிறுத்தை ஆகும்.

சிறுத்தையை மீட்க முயன்ற போது அது, உதவி வன பாதுகாவலர் மகேந்திரனை தாக்கியது. அதில் அவருடைய கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டது. காயம் அடைந்த மகேந்திரன் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மின்வேலியில் சிக்கி சாவு

இந்த சம்பவம் நடந்த அதே வனப்பகுதியில், இருந்து சற்று தொலைவில் நேற்று ஒரு சிறுத்தை சோலார் மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்தது. தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அதுவும் 2 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை.

சிறுத்தையின் உடலில் மின்வேலி கம்பிகள் சுற்றி இருந்தன. அதன் வாயில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் பிணமாக கிடந்தது. மேலும் அதன் உடலிலும் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு கால்நடை மருத்துவ குழுவினர் வந்து சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அங்குள்ள வனப்பகுதியில் சிறுத்தையின் உடல் எரித்து அழிக்கப்பட்டது.

அதிகாரி விளக்கம்

இது வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தையாக இருக்கலாம் என்று வன ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) குருசாமி தபாலாவிடம் கேட்டபோது, "இந்த சிறுத்தை வன அதிகாரியை தாக்கிய சிறுத்தை இல்லை. வன அதிகாரியை தாக்கிய சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது அதே வயதுள்ள வேறு சிறுத்தை. இதுவும் சோலார் மின் வேலியில் சிக்கி தப்பிச் செல்ல முடியாமல் இறந்துள்ளது. இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தெரியும்" என்றார்.


Next Story