தேனி அருகே மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் சென்ற விநாயகர் சிலை

தேனி அருகே மோட்டார் சைக்கிளில் விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
தேனி அருகே பூமலைக்குண்டு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கிராம மக்கள் சார்பில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி அங்குள்ள சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மேலும் அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் (புல்லட்) விநாயகர் சிலை அமர்ந்து இருப்பது போல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த சிலையுடன் கூடிய மோட்டார் சைக்கிள் ஒரு டிராக்டரில் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஊரின் முக்கிய பகுதிகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பெண்கள் பலர் முளைப்பாரி எடுத்து சென்றனர். மோட்டார் சைக்கிளில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) விநாயகர் சிலைகள் ஊரில் இருந்து வீரபாண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்படுகிறது.