தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான அடையாளம் மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை


தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான அடையாளம்    மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
x

தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான அடையாளம் என்று மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்


நீட் தேர்வு பயிற்சி வகுப்பு

விழுப்புரம் அருகே வளவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டார். அதன் பின்னர் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாணவ- மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான அடையாளம். தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் எல்லோரும் வியக்கும் வண்ணம் அதிகளவு மதிப்பெண் பெற்று பாராட்டுகளை பெற்று வருகிறீர்கள். இங்கு படிக்கும் அனைவரும் நடுத்தர குடும்பம் மற்றும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பீர்கள். ஒவ்வொரு மாணவ- மாணவியும் தங்கள் மனதிற்குள் ஒரு சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னவென்றால் 'என்னாலும் முடியும்" என்று நினைத்து படிக்கும்போது எளிதாக இலக்கை அடைவீர்கள். அதற்கு ஆசிரியர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். எந்தவொரு மாணவரும் பெற்றோர், கடவுள், ஆசிரியர் ஆகியோரின் நன்மதிப்போடு செல்லும்போது அவர்களுக்கு வெற்றி முன் செல்லும்.

அறிவுரை

கல்வியால் மாணவருக்கும் பெருமை, ஆசிரியருக்கும் பெருமை. அதை விட மற்றொரு பெருமை ஒன்று உண்டு என்றால் பிள்ளைகளால் சாதனை கிடைத்தால் அவர்களின் பெற்றோர்களுக்கு பெருமை தானாக தேடி வந்துவிடும். ஆக நாம் கற்கும் கல்வி, நம்மை மட்டுமல்ல நம்மை சுற்றியுள்ள அத்தனை பேருக்கும் பெருமையை தேடித்தரக்கூடிய மாபெரும் சக்தியாக திகழ்கிறது. எனவே நாம் நன்றாக படித்து நம் லட்சியத்தை நிறைவேற்றிடவும் நம்மால் மற்றவர்களுக்கு பெருமையை தேடித்தரவும் சிறந்த முறையில் கல்வி பயின்று சாதனையாளர்களாக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

1 More update

Next Story