விசைத்தறி தொழிலாளர்களுடன் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை
பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளிபாளையம்
விசைத்தறி தொழிலாளர்கள்
பள்ளிபாளையத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. விசைத்தறி தொழிலை சார்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக விசைத்தறி கூலி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு என்பது ஏற்படவில்லை. இந்நிலையில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண், பெண் தொழிலாளர்களுக்கும் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கடந்த 6 மாதங்களாக பல்வேறு இயக்கங்கள், ஆர்ப்பாட்டம், அதிகாரிகளை சந்தித்து மனு வழங்குவது, சேலம் தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை உள்ளிட்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) கூலி உயர்வு கேட்டு, விசைத்தறி தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து துண்டு பிரசுரங்கள் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வேலை நிறுத்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் தயாராகி வந்த நிலையில், நேற்று பெரிய காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், விசைத்தறி ஜவுளி உரிமையாளர்கள், விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
போராட்டம் ஒத்திவைப்பு
இந்த பேச்சுவார்த்தையில், முதல் கட்டமாக 3 சதவீத கூலி உயர்வு வழங்குவது, எதிர்வரும் 2 மாதங்களுக்குள், விசைத்தறி கூலி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது, அதன் அடிப்படையில் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள், வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் சமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அதன் அடிப்படையில் (இன்று) திங்கள் அன்று நடைபெறவிருந்த விசைத்தறி தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இடது தொழிற்சங்க மையம் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் திட்டமிட்டபடி, வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடரும் என மற்றொரு விசைத்தறி இடது தொழிற்சங்க மையம் (கவுன்சில்) அறிவித்துள்ளது.