நெல்லை-திசையன்விளை 'என்ட் டூ என்ட்' பஸ்கள் மீண்டும் இடைநில்லாமல் இயக்கம்
நெல்லை-திசையன்விளை ‘என்ட் டூ என்ட்’ பஸ்கள் மீண்டும் இடைநில்லாமல் இயக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
திசையன்விளை:
நெல்லை-திசையன்விளை இடையே 'என்ட் டூ என்ட்' என்ற பெயரில் இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது. இதனால் சுமார் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை பயண நேரம் கூடுதல் ஆனது. இதன் காரணமாக பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. இதுதொடர்பாக 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் என்ட் டூ என்ட் பஸ்களை மீண்டும் இடைநில்லாமல் இயக்க வலியுறுத்தி திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்து மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் வியாபாரிகள் சங்க பேரமைப்பு திசையன்விளை தலைவர் சாந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை குறித்து பேசினர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன், பொதுமேலாளர் சரவணன் ஆகியோரை தொடர்பு கொண்டு, நெல்லை-திசையன்விளை என்ட் டூ என்ட் பஸ்சை மீண்டும் இடைநில்லாமல் இயக்கும்படி கூறினார். இதையடுத்து நேற்று காலை முதல் அந்த பஸ்கள் இடைநில்லாமல் இயக்கப்பட்டன. இதையொட்டி திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கத்தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில் வியாபாரிகள், பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.