26-ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்


26-ந்தேதி  உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பருவமழை தீவிரமாக இருந்தாலும், கடந்த மாதம் (அக்டோபர்) குறைவாக மழை பதிவானதால் இயல்பைவிட மழை குறைவாகவே உள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைய தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அனேக இடங்களில் மழை பதிவாகி உள்ளது. அதில் 5 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 17 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

இதனைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (23-11-2023) முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதேபோல், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை (24-11-2023) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இதனையடுத்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், 26-ந்தேதிக்குள் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் இந்த தாழ்வுப் பகுதி சற்று வலுவிழந்த நிலையில் நகர்ந்து வந்தால், தமிழ்நாட்டுக்கு நல்ல மழை இருக்கும் என்றும், அதிலும் குறிப்பாக சென்னையில் அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story