இந்தோனேசியாவில் கடலில் மூழ்கி பலியான புதுமண டாக்டர் தம்பதி உடல்கள் சென்னை கொண்டு வரப்பட்டன


இந்தோனேசியாவில் கடலில் மூழ்கி பலியான புதுமண டாக்டர் தம்பதி உடல்கள் சென்னை கொண்டு வரப்பட்டன
x

இந்தோனேசியாவில் கடலில் மூழ்கி பலியான புதுமண டாக்டர் தம்பதி உடல்கள் சென்னை கொண்டு வரப்பட்டன. அவர்களது உடல்களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

டாக்டர் தம்பதி பலி

பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்த டாக்டர் விபூஷ்ணியா-சென்னையை சேர்ந்த டாக்டர் லோகேஸ்வரன் ஆகியோருக்கு கடந்த 1-ந்தேதி இருவீட்டார் சம்மதத்துடன் பூந்தமல்லியில் வெகுவிமரிசையாக திருமணம் நடைபெற்றது.பின்னர் புதுமண தம்பதிகள் தேனிலவு கொண்டாட இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு சென்றனர். அங்கு கடலில் 'போட்டோ சூட்' நடத்தியபோது நிலை தடுமாறி கடலில் விழுந்த விபூஷ்ணியா-லோகேஸ்வரன் இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள்.

சென்னை வந்த உடல்கள்

அந்த நாட்டில் உள்ள பல்வேறு சட்டதிட்டங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு 10 நாட்களுக்கு பிறகு இருவரது உடல்களும், இந்தோனேசியாவில் இருந்து விமானம் மூலம் மலேசியா கொண்டு வரப்பட்டு அங்கிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

விமான நிலையத்தில் இருவரது உடல்களுக்கும் இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் விமான நிலையத்திலிருந்து விபூஷ்ணியாவின் உடலை சென்னீர்குப்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கும், லோகேஸ்வரன் உடலை அவர்களது சொந்த ஊரான சேலத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இறுதிச்சடங்கு

சென்னீர்குப்பத்தில் உள்ள வீட்டில் விபூஷ்ணியாவின் உடலுக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று காலை 11 மணிக்கு போரூரில் உள்ள மின் மயானத்துக்கு விபூஷ்ணியாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மணக்கோலத்தில் பார்த்த தங்கள் மகள் விபூஷ்ணியாவை தற்போது பிணக்கோணத்தில் அவரது முகத்தை கூட பார்க்க முடியாமல் சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவரது பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

பலியான புதுமண டாக்டர் தம்பதியின் உடல்களை இந்தோனேசியாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வருவதில் எவ்வளவு சவால்கள் இருந்தது? என்பது குறித்து அவரது உறவினர் ஒருவர் கூறியதாவது:-

பல லட்சம் ரூபாய் செலவு

கடந்த 1-ந் தேதி இருவருக்கும் விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது. 3-ந்தேதி இருவரும் தேன்நிலவுக்காக விமானம் மூலம் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சென்றனர். அங்கு புதுமண தம்பதிகள் மட்டும் 'போட்டோ சூட்' எடுப்பதற்காக செல்வது வழக்கம். இதற்காக 7-ந்தேதி படகில் லோகேஸ்வரன்-விபூஷ்ணியா உள்பட 150 ஜோடிகள் கடலுக்கு நடுவில் இருந்த பாறையின் இடையில் நின்று 'போட்டோ சூட்' நடத்தினர்.

அப்போது ராட்சத அலை இவர்கள் இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றதில் பலியானார்கள். 7-ந் தேதி இரவு எங்களுக்கு இருவரும் உயிரிழந்த தகவல் கிடைத்தது. உடனடியாக எங்களது உறவினர்கள் 3 பேர் விமானம் மூலம் இந்தோனேசியா சென்றனர். அங்கு தூதரக அதிகாரிகள் உதவியுடன் பிரேத பரிசோதனை முடிந்து உடல்கள் 'எம்பார்மிங்' செய்யப்பட்டு அங்குள்ள கோர்ட்டில் நீதிபதிகள் இது விபத்துதான் என்பதை உறுதி செய்த பிறகு உடல்களை சென்னை கொண்டு வந்தோம். இந்தோனேஷியாவில் இருந்து இருவரின் உடல்களையும் எடுத்து வருவதற்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்தோம். அதனாலேயே 10 நாட்களுக்குள் இருவரது உடல்களையும் கொண்டு வர முடிந்தது. இல்லாவிட்டால் மேலும் சில வாரங்கள் ஆகியிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story