காதலன் வீட்டுக்கு சீருடையில் வந்த கல்லூரி மாணவி: போலீசாருக்கு தகவல் கொடுத்த கிராம மக்கள்


காதலன் வீட்டுக்கு சீருடையில் வந்த கல்லூரி மாணவி: போலீசாருக்கு தகவல் கொடுத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 28 Feb 2024 11:25 PM GMT (Updated: 28 Feb 2024 11:46 PM GMT)

காதலன் வீட்டுக்கு சீருடையில் வந்த கல்லூரி மாணவியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து வருகிறார்கள். வாலிபரின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். இதனால் பகல் வேளையில் வீட்டில் யாரும் இருப்பதில்லை.

இதை பயன்படுத்தி கல்லூரி மாணவி அடிக்கடி காதலன் வீட்டுக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு வரும் போது கல்லூரி சீருடையில் தான் வருவது வழக்கம். இதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பல நாட்களாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், வழக்கம்போல தன் காதலன் வீட்டிற்கு நேற்று மாணவி கல்லூரி சீருடையில் வந்துள்ளார். காதலன் வீட்டுக்குள் சென்று கதவை உள் பக்கமாக பூட்டி விட்டு இருவரும் தனிமையில் இருந்தனர். இதை பார்த்த கிரம மக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை தட்டினர். அப்போது காதலனும் கல்லூரி மாணவியும் கதவை திறந்து வெளியே வந்தனர். வெளியே போலீசார் நிற்பதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து போலீசார் மாணவியை தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது தாங்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கல்லூரி மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.

போலீசார் அவரிடம், 'கல்லூரி சீருடையில் இவ்வாறு ஒரு வீட்டுக்கு தனிமையில் வந்து செல்வது தவறு. எனவே இனிமேல் இவ்வாறு வரக்கூடாது' என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டுக்கும் தெரிய வந்தது. அவர்களும், 'இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்கனவே முடிவு செய்து உள்ளோம். மாணவி இறுதியாண்டு படித்து வருவதால் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்போம்' என்றனர்.


Next Story