போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவு: ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவு: ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்
x
தினத்தந்தி 1 March 2024 11:18 AM GMT (Updated: 1 March 2024 12:13 PM GMT)

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை,

போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள், தேங்காய் பவுடர் மற்றும் 'ஹெல்த் மிக்ஸ்' (சத்து மாவு) பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக அந்த நாடுகளை சேர்ந்த சுங்க இலாகா அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படை கடந்த 4 மாதங்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. இந்த நிலையில், இந்த கடத்தல் கும்பல், மேற்கு டெல்லியில் உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 15-ந்தேதி அதிரடியாக அங்கு நுழைந்த போலீசார் அங்கிருந்த சென்னையை சேர்ந்த முகேஷ் (வயது 33), முஜிபுர் ரகுமான் (34), விழுப்புரத்தை சேர்ந்த அசோக் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ போதையூட்டும் வேதிப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் பின்னணியில் தமிழகத்தை சேர்ந்த மேலும் சிலர் இருப்பதும், கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அவர்கள் அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. சுமார் 3,500 கிலோ வேதிப்பொருளை கடத்தியதன் மூலம் சுமார் ரூ.2,000 கோடி வரை இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்று தெரியவந்தது.

கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என தகவல் வெளியானது. இதையடுத்து தி.மு.க.வில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். தற்போது ஜாபர் சாதிக் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் உள்பட வழக்கில் தொடர்புடையதாக மேலும் சிலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில், டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த சம்மனை சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதி அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒட்டினர்.

இந்த நிலையில், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர்சாதிக் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. சோதனை முடிந்த பிறகு, போலீசார் அந்த வீட்டுக்கு 'சீல்' வைத்தனர். தொடர்ந்து ஜாபர் சாதிக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொடுத்துள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Next Story