என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் சரண் அடைந்த 6 பேரையும் 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

சென்னை

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்லா (வயது 36), மாலிக் (34), செல்லா (35), சித்திக் (35) ஆகியோர் கூட்டாக சென்னை மண்ணடி மலையப்பன் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, பர்மாபஜாரில் செல்போன் கடை வைத்துள்ளனர். இவர்கள் மொத்தமாக செல்போன்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த 13-ந் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து 7 பேர் கும்பல் இவர்களது வீடு மற்றும் கடைகளில் சோதனை நடத்தி ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய மண்ணடியை சேர்ந்த பா.ஜ.க. மத்திய சென்னை பிரமுகர் வேலு என்ற வேங்கை அமரன், அவரது கூட்டாளிகளான ரவி, விஜயகுமார், தேவராஜ், புஷ்பராஜ், கார்த்திக் ஆகிய 6 பேர் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் 6 பேரும் 14 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகமது பைசல் (36) என்ற மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் கோர்ட்டில் சரண் அடைந்த 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

நேற்று அந்த மனுவை விசாரித்த நீதிபதி, பா.ஜ.க. பிரமுகர் உள்பட 6 பேரையும் 6 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.


Next Story