என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் கொள்ளை - 3 பேருக்கு வலைவீச்சு


என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் கொள்ளை - 3 பேருக்கு வலைவீச்சு
x

என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்துல்லா (வயது 36), மாலிக் (34), செல்லா (35) மற்றும் சித்திக் (35). இவர்கள் 4 பேரும் சென்னை மண்ணடி மலையப்பன் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, பர்மா பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்கள். இவர்கள் மொத்தமாக செல்போன்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள்.

நேற்று மண்ணடியில் உள்ள வீட்டில் அப்துல்லா மட்டும் தனியாக இருந்தார். அப்போது 'டிப்-டாப்' ஆசாமிகள் 3 பேர் அங்கு வந்தனர். தங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்று அப்துல்லாவிடம் அறிமுகம் செய்து கொண்ட அவர்கள், வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து சோதனை செய்தனர்.

அப்போது வீட்டில் இருந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டனர். மேலும் செல்போனை வாங்குவதில் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் வந்துள்ளதாக கூறி பர்மா பஜாரில் உள்ள அவர்களது கடைக்கும் அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அப்போது கடையில் இருந்து மேலும் ரூ.20 லட்சத்தை கைப்பற்றிய அவர்கள், அலுவலகத்துக்கு வந்து அந்த பணத்துக்கு முறையான ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுங்கள் என கூறிவிட்டு ரூ.30 லட்சத்துடன் 3 பேரும் சென்றுவிட்டனர்.

இதையடுத்து அப்துல்லா மற்றும் அவரது நண்பர்கள் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு சென்று விசாரித்தபோது அதுபோல் யாரும் சோதனையிட வரவில்லை என கூறினர்.

பின்னர்தான் மர்மநபர்கள், என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து தங்களிடம் பணத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்து செல்போன் வியாபாரிகளான 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துறைமுகம் போலீஸ் உதவி கமிஷனர் வீரக்குமார் மேற்பார்வையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிப்படை அமைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இது கணக்கில் வராத ஹவாலா பணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story