நெய்வேலியில் என்எல்சி பொது காண்டிராக்ட் தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
நெய்வேலியில் என்.எல்.சி. பொது காண்டிராக்ட் தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நகர நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் சாலை பராமரிப்பு பிரிவில் சுமார் 35 தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தனர். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் ஏ.டி.எம். கார்டு, வங்கி கணக்கு புத்தகம், அடையாள அட்டை உள்ளிட்டவைகளை என்.எல்.சி. ஒப்பந்ததாரர் வாங்கி வைத்து கொண்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை குறைவாக கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஒப்பந்ததாரர்களிடம் ஏ.டி.எம். கார்டு, வங்கி புத்தகம் உள்ளிட்டவைகளைதர மறுத்த 8 தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
முற்றுகை போராட்டம்
இதனை கண்டித்து என்.எல்.சி. பொது காண்டிராக்ட் தொழிலாளர் ஊழியர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நெய்வேலி நகர நிர்வாக அலுவலகம் எதிரே முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் மாதவி, மாதர் சங்க நகர செயலாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாநில குழு உறுப்பினர் வேல்முருகன் நன்றி கூறினார்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு
அப்போது அவர்கள் கூறுகையில், புதுச்சேரியில் (ஏ.எல்.சி.) தொழிலாளர் நலன் அதிகாரி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பணியில் இருந்து நீக்கிய 8 தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என அறிவித்திருந்தும் என்.எல்.சி. நகர நிர்வாக அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே பாதிக்கப்பட்டுள்ள 8 தொழிலாளர்களுக்கும் 10 நாட்களுக்குள் மீண்டும் வேலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும் என்று தெரிவித்தனர்.