என்.எல்.சி. அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
சேத்தியாத்தோப்பு அருகே நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி. அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேத்தியாத்தோப்பு
சுரங்க விரிவாக்க பணி
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் இரண்டாவது சுரங்கம் விரிவாக்க பணிக்காக பல்வேறு கிராமங்களை கையகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை ஊராட்சி கரிவெட்டி கிராமத்தில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி என்.எல்.சி. நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து என்.எல்.சி. நிர்வாகம் நேற்று நிலங்களை கையகப்படுத்தி அளவீடு செய்ய முயற்சி செய்தது. இதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் தலைமையில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் மற்றும் போலீசார் கரிவெட்டி கிராமத்திற்கு வந்தனர்.
முற்றுகை
இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் நிலத்தை அளவீடு செய்ய முயன்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள், குடும்ப அட்டைதாரர்களில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே நிலத்தை அளவீடு செய்ய அனுமதிப்போம் என்றனர். இதனால் அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்யும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.