என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை


என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை
x

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என கருத்துகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

கடலூர்

நெய்வேலி,

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நெய்வேலி 11-வது வட்டத்தில் உள்ள லிக்னைட் அரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வானதிராயபுரம், வடக்குவெள்ளூர், கரிவெட்டி, கத்தாழை, வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட 14 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கடந்த காலங்களில் எங்களது நிலங்களை கையகப்படுத்தியது. ஆனால் அதற்கான இழப்பீட்டு தொகை, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் வீட்டுமனை பட்டா உள்ளிட்டவற்றை வழங்கவில்லை என்றனர். தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.

வேலைவாய்ப்பு

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சபா.ராஜேந்திரன், தி.வேல்முருகன், ராதாகிருஷ்ணன், அருண்மொழிதேவன், பாண்டியன் ஆகியோர் பேசுகையில், விவசாயிகள் பலரும் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார்கள். இதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பு, இழப்பீட்டு தொகை உள்ளிட்டவை கிடைக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையை மாற்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே வழங்க வேண்டும் என்றனர்.

நல்ல தீர்வு

இதனை தொடர்ந்து என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் பேசுகையில், என்.எல்.சி. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இப்பகுதி மக்களின் அர்ப்பணிப்பு தான் காரணம் என்று எனக்கு தெரியும். எனக்கு தமிழ் மொழி தெரியாது. ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் உடல் அசைவுகள், பேசிய விதங்களில் இருந்து அவர்களின் நீண்ட நாள் பிரச்சினைகள் என்னவென்று தெரியவருகிறது. அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நிறைய இளைஞர்கள் இருந்தும் ஏன் வட மாநிலங்களில் இருந்து மட்டும் என்ஜினீயர்களை நியமனம் செய்கிறார்கள் என பலர் கேள்வி கேட்டது எனக்கு புரியவருகிறது.

வரும் காலங்களில் கருத்து கேட்பு குழுக்களை அமைத்து அதன் மூலம் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைத்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

அமைச்சர் சி.வெ.கணேசன்

இதனை தொடர்ந்து அமைச்சர் சி.வெ.கணேசன் கூறுகையில், என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்கவில்லை. இது அவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து கிராமங்களுக்கும் ஆலோசனை குழுக்களை அமைத்து நேரடியாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து தீர்வு காணவேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் என்.எல்.சி. நில எடுப்பு துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story