தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாது


தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாது
x

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் பேட்டி

திருப்பூர்

திருப்பூர்,

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாது. என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் திருப்பூரில் பேட்டியின் போது கூறினார்.

சங்கமம் நிகழ்ச்சி

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மேற்கு மண்டல தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேற்கு மண்டல தலைவர் ராஜா உசேன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் அப்துல் ஹக்கீம், தொழிற்சங்க மாநில பொருளாளர் ஹசன்பாபு, தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பாபு வரவேற்றார். வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் இதாயத்துல்லா தொகுப்புரை ஆற்றினார். இதில் கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மோடி அச்சம்

முன்னதாக மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:-

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகள் அழைத்தும் பல்லாயிரம் கோடி செலவில் அவர் கட்டிய கட்டிடத்திற்கே மோடி வர அச்சப்படுகிறார். மணிப்பூர், அரியானா, மராட்டிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பொறுப்பேற்று மோடி, அமித்ஷா ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

பனியன் வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர் பனியன் வர்த்தகம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கு முன்பு போல வரிவிதிக்க வேண்டும். இதேபோல் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளுக்கு டுயூட்டி டிராபேக் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்.

பா.ஜ.க. வெற்றி பெறாது

ராகுல்காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு நம்பிக்கையான தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆனால் அவருக்கு உடனடியாக எம்.பி. பதவியை வழங்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் ஒன்று கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாது. ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு அருகதையற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க.தான்.

அமைதியாக இருக்கும் மாநிலத்தில் அமைதியை கெடுக்க முயற்சிக்கின்றனர். எனவே தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு இதுபோன்ற யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்.

இந்தியா (ஐ.என்.டி.ஐ.ஏ.) கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் இடம்பெறவில்லை. எனவே பா.ஜ.க.விற்கு எதிராக யாரெல்லாம் நிற்கிறார்களோ, அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அரவணைக்கக்கூடிய தேவை அந்த கூட்டணிக்கு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story