கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல்


கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல்
x

மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தளமான கொடைக்கானலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து ஒரு மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சுற்றுலா பயணிகளிடம் கூப்பன்களை கொடுத்து, பரிசு விழுந்தால் வெளிநாடுகளுக்கு குறைந்த செலவில் அழைத்துச் செல்வதாகக் கூறி ஆசை காட்டுவதை அந்த கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளது. இதற்கான தனி இணையதளத்தை தொடங்கி, அதில் கவர்ச்சிகரமான சுற்றுலா அறிவிப்புகளையும் அந்த கும்பல் வெளியிட்டுள்ளது.

இதனை நம்பி கோவையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியுள்ளார். ஆனால் அதன் பிறகு அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் இணையதளமும் முடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அதன்படி, மோசடியில் ஈடுபட்ட அணில் அஜய் மேக்சா, சுருதி, சாவாஜ், ஒசாமா, ராகுல்சா, சிவா மற்றும் தீபிகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், லேப்டாப், பரிசு கூப்பன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 30 லட்சம் ரூபாய் வரை பண பரிமாற்றம் நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.


1 More update

Next Story