மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி
அன்னவாசல் அருகே செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது மின்சாரம் பாய்ந்து வட மாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிரஷர்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பணம்பட்டியில் கிரஷர் ஒன்று இயங்கி வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட பலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கிரஷரில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை பார்க்க அவரது உறவினரான பீகார் காத்டோலா பகுதியை சேர்ந்த முகமது மகன் முகமது ஜாவித் (வயது 25) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தார். பின்னர் அவர் அவரது உறவினருடன் கிரஷரில் இருந்ததாக கூறப்படுகிறது.
வாலிபர் சாவு
இந்தநிலையில் உறவினரின் அறையில் இருந்த முகமது ஜாவித் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முகமது ஜாவித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.