நடிகர் விஜய் மட்டுமின்றி ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்- டி.டி.வி. தினகரன் பேட்டி
நடிகர் விஜய் மட்டுமின்றி ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அ.ம.மு.க. பொது செயலாளா் டி.டி.வி.தினகரன், காந்தி மற்றும் காமராஜர் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சினிமா துறை பற்றியும் அதன் பிரச்சினைகள் குறித்தும் எனக்கு முழுமையாக தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் நடிகர் விஜய் மட்டுமின்றி யார் வேண்டுமானா லும் அரசியலுக்கு வரலாம். கூட்டணி குறித்து தற்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது குறித்து டிசம்பர் மாதம் தெரிவிக்கப்படும். பா.ஜனதாவில் இருப்பவர்கள், என்னோடு பேசிவருகின்றனர். அங்குள்ள நண்பர்கள் யார் என்பதை குறித்து தெரிவிக்க விரும்பவில்லை.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, போதை கலாசாரம், மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளது. தி.மு.க.வினர் தேர்தல் சமயத்தில் அறிவித்த வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் உள்ளது. ஹிட்லர் ஆட்சி போல தான் ஸ்டாலின் ஆட்சி உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.
தி.மு.க. கடந்த 2014 தேர்தலில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை என நினைக்கிறேன். அப்போது அவர் பொறுப்பேற்று நீங்கி இருப்பாரா? அவர்களால் ஒரு ஒன்றிய செயலாளர் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியாது. கர்நாடகாவில் வன்முறை தூண்டப்படுகிறது. இதே போல்தான் முல்லைபெரியாறு அணையிலும் பிரச்சினை எழுந்தது. அதனால் தேசிய கட்சிகளால் மாநிலங்களுக்கு பயனில்லை என்பது உறுதியாகிறது. மாநில கட்சிகள் வலுவாக இருந்தால் தான் அந்தந்த மாநில பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.