ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது


ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது
x
தினத்தந்தி 20 Oct 2023 10:15 PM GMT (Updated: 20 Oct 2023 10:15 PM GMT)

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 பேரை ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது என்று தமிழ்நாடு பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 பேரை ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது என்று தமிழ்நாடு பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் ஆசிரியர் சங்க கோவை மண்டல செயற்குழு கூட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நீலகிரி கிளை தலைவர் விஜய், கிளை பொருளாளர் காயத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கதிரவன், பொது செயலாளர் கண்ணையன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காகவும், துறை மாற்றத்திற்காகவும் பணம் பெற்ற குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கல்லூரி முதல்வர், தாவரவியல் துறை பேராசிரியர் ஆகியோரை மீண்டும் இந்த கல்லூரியிலேயே பணியமர்த்தக் கூடாது. போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனரின் நேரடி மேற்பார்வையில் பேராசிரியர்களை கொண்டு விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

ஊக்க ஊதியம்

ஊட்டி அரசு கல்லூரியில் 2018-2019-ம் கல்வியாண்டில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் என்ற பெயரில், இருக்கைகள் வாங்குவதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.1,000 என மொத்தம் ரூ.40 லட்சம் வசூல் செய்ததில், முறையான கணக்கு இல்லை. இதுகுறித்து அப்போதைய கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு துறை தலைவர் பொறுப்புகளை வழங்காமல், நிரந்த பேராசிரியர்களுக்கே வழங்க ஆவன செய்ய வேண்டும். கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கான எஸ்.சி., எஸ்.டி. கிளை முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள், பிற தற்காலிக பணியிடங்கள் நிரப்பும் போது இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயித்த தகுதியான கவுரவ விாிவுரையாளர்களுக்கு யு.ஜி.சி. வழிகாட்டுதல் படி ஊதியம் வழங்க வேண்டும். 2016-ம் ஆண்டிற்கு பிறகு முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மண்டல நிர்வாகிகள் சுரேஷ்பாபு, சக்திவேல், சதாசிவம், தமிழ்மணி, சேவியர், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மண்டல செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்றார். முடிவில் கிளை செயலாளர் பிரவீணா தேவி நன்றி கூறினார்.


Next Story