ஆ.ராசா எம்.பி.யின் சொத்து முடக்கப்பட்ட இடத்தில் நோட்டீஸ்


ஆ.ராசா எம்.பி.யின் சொத்து முடக்கப்பட்ட இடத்தில் நோட்டீஸ்
x
தினத்தந்தி 12 Oct 2023 8:00 PM GMT (Updated: 12 Oct 2023 8:00 PM GMT)

கோவையில் ஆ.ராசா எம்.பி.யின் சொத்து முடக்கப்பட்ட இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.

கோயம்புத்தூர்

கோவையில் ஆ.ராசா எம்.பி.யின் சொத்து முடக்கப்பட்ட இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.


ஆ.ராசா எம்.பி.


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்பி.யுமான ஆ.ராசா மீது 2015-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.


பின்னர் சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் ஆ.ராசாவுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து ஆ.ராசா எம்.பி. உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


சொத்துக்கள் முடக்கம்


இதுதவிர ஆ.ராசா எம்.பி. மீது அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. அதன் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 2002 விதிகளின் கீழ் ஆ.ராசா எம்.பி.க்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன.


அதில் அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் பிரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கோவையை அடுத்த எட்டிமடை அருகே திருமலை யாம்பாளையத்தில் ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை கடந்த 9-ந் தேதி முடக்கியது.


நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்


இதைத்தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை துணை இயக்குனர் கார்த்திக் தாசரி உத்தரவின் பேரில், 3 பேர் கொண்ட குழுவினர் திருமலையம்பாளையம் வடக்கு கிராமத்தில் எல்லை மகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள ஆ.ராசாவுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் கண்டு, அளவீடு செய்து அந்த விவரங்களை குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டினர்.


அந்த நோட்டீசில், இந்த சொத்துகள் அமலாக்கத் துறையால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இவை அடுத்த உத்தரவு வரும் வரை அமலாக்க இயக்ககத்தின் வசம் இருக்கும். சொத்துகள் சட் டத்தின் கீழ் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக அப்படியே வைக்கப்படும்.

மேலும் சொத்துகளை விற்பனை, அன்பளிப்பு, அடமானம் அல்லது வேறு எந்த வகையிலும் மாற்றவோ அல்லது பணம் வசூலிக்கவோ தடை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டு உள்ளது.



Next Story