செவிலியர்கள் தொடர் உண்ணாவிரதம்


செவிலியர்கள் தொடர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:45 PM GMT)

என்.எல்.சி. மருத்துவமனை முன்பு செவிலியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடலூர்

நெய்வேலி

நெய்வேலி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்த செவிலியர்கள் 26 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இதை கண்டித்தும், தொடர்ந்து பணி வழங்கக்கோரியும் பணி நீக்கம் செய்யப்பட உள்ள செவிலியர்கள் நேற்று முன்தினம் காலை என்.எல்.சி. மருத்துவமனை முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணலாம் என்றனர். இதை ஏற்று செவிலியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

பின்னர் அன்று மாலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று பாதிக்கப்பட்ட செவிலியர்கள் என்.எல்.சி. மருத்துவமனை முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபற்றி செவிலியர்கள் கூறும்போது, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எங்களை தேர்வு செய்தபோது ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கினார்கள். அடுத்தடுத்து ஒப்பந்தங்கள் மாறினாலும் வேலை செய்யும் செவிலியர்களான உங்களை மாற்ற மாட்டோம் என தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது உரிய கல்வி தகுதி இல்லை என்று கூறி வேலை செய்து வந்த 26 பேரை பணி நீக்கம் செய்து விட்டு புதிதாக ஆட்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். கொரோனா உள்ளிட்ட பல இக்கட்டான நேரங்களில் கடும் சிரமத்தையும் பாராமல் வேலை செய்து வந்த எங்களை திடீரென பணி நீக்கம் செய்வது என்பது மிகவும் வேதனையாக உள்ளது. எனவே எங்கள் குடும்பத்தின் நிலையை கருதி என்.எல்.சி.நிர்வாகம் எங்களுக்கு தொடர்ந்து பணியில் அமர்த்த வேண்டும் என்றனர்.


Next Story