கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகள் பணி நிரந்தரம் செய்யக்கோரி முற்றுகை போராட்டம்


கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகள் பணி நிரந்தரம் செய்யக்கோரி முற்றுகை போராட்டம்
x

கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகள், பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட நர்சுகளுக்கான பணி வாய்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நோய்த்தொற்று இருந்த காலத்தில் 2 ஆண்டு 7 மாதங்கள் பணியில் இருந்த நிலையில், தற்போது பணியில் இருந்து விடுவிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கோரி போராட்டம் நடத்திய அவர்கள், கொரோனா காலத்தில் பணியில் சேர்ந்த டாக்டர்களை பணி நிரந்தரம் செய்தது போல, தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பணி நிரந்தரம்

மேலும் இதற்கு முன்பு என்ன மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ? அதை பின்பற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் தெரிவித்தனர்.

அரசு தகுதித்தேர்வு மூலம் (எம்.ஆர்.பி.) நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்து தகுதி பெற்றவர்களாக இருந்த நாங்கள், தற்போது தகுதியிழந்துவிட்டோமா? என்று கோஷமிட்ட அவர்கள், எம்.ஆர்.பி. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தவர்களை மாவட்ட சுகாதாரத்துறை மூலம் பணிமாற்றம் செய்யும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

உண்ணாவிரதம்

அரசு கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்த நர்சுகள் இன்று (வியாழக்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


Next Story