ஓ.பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயார் - வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி.!


ஓ.பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயார் - வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி.!
x

Image Courtesy: PTI

அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பதவி வெறியில் நடந்தது பொதுக்குழுவே அல்ல, அரை மணி நேரம் நடந்த ஓரங்க நாடகம். பொதுக்குழுவில் பொய்யாக கையெழுத்திட்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டுள்ளனர்.

புதிதாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து வெளிநடப்பு செய்தோம். அ.தி.மு.க.வின் நடைமுறைகளை மாற்றியுள்ளனர் இன்று பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம். அ.தி.மு.க. பொதுக்குழு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை

அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது.

நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக வந்துள்ளது. அதை மீறி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். 23 தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பு கூறிய நிலையில், அதையும் மீறி தீர்மானம் போடப்பட்டுள்ளது.அதிமுக பொதுக் குழுவில் கத்தியவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்ல, கூலிக்கு அழைத்து வரப்பட்டவர்கள்.

தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பொதுக்குழுவே செல்லாதக் கூட்டமாகிவிட்டது. காட்டுமிராண்டித்தனமாக பொதுக் குழு நடந்துள்ளது. பொதுக் குழுவை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவைக் கூட்ட கட்சியின் அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை.

பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டதாக சொல்லப்பட்ட கடிதம் உண்மையானது அல்ல; போலியாக பலர் கையெழுத்து போட்டுள்ளனர்.

அடுத்த பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளோம்.

கடசியின் நலன்கருதி ஓ.பன்னீர் செல்வம் எப்போது பேச்சுவார்த்தைக்கு தயார்.அதற்கு அவர்கள் தான் ஒத்துவரவேண்டும். அம்மா எண்ணப்படி அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். கூட்டுத்தலைமைதான் கட்சி வளர்ச்சிக்கு உகந்தது என்பது ஒருங்கிணைப்பாளரின் கருத்து என கூறினார்.


Next Story