மாணவியிடம் ஆபாச பேச்சு: அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் 2 பேர் பணி நீக்கம்


மாணவியிடம் ஆபாச பேச்சு: அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் 2 பேர் பணி நீக்கம்
x

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய விவகாரத்தில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

கல்லூரி மாணவியிடம் ஆபாச பேச்சு

புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவரிடம் கவுரவ விரிவுரையாளர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாணவியின் உறவினர்கள் கல்லூரிக்கு வந்து அந்த விரிவுரையாளரின் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி விட்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக இந்திய மாணவர் சங்க அமைப்பின் சார்பில் போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கல்லூரி தரப்பிலும் பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அந்த மாணவியிடம் கவுரவ விரிவுரையாளர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

2 பேர் பணி நீக்கம்

இந்த நிலையில் பேராசிரியர்கள் குழுவினர் விசாரணை அடிப்படையில் சம்பந்தப்பட்ட கவுரவ விரிவுரையாளர் முத்துக்குமார் மற்றும் அவருக்கு துணையாக இருந்த மற்றொரு கவுரவ விரிவுரையாளர் கலையரசன் ஆகியோரை பணி நீக்கம் செய்து கல்லூரி முதல்வர் திருச்செல்வம் உத்தரவிட்டார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் திருச்செல்வத்திடம் கேட்டபோது, "மாணவியிடம் ஆபாசமாக பேசியது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின்படி கவுரவ விரிவுரையாளர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முத்துக்குமார் பி.பி.ஏ. துறையிலும், கலையரசன் விலங்கியல் துறையிலும் பணியாற்றி வந்தனர்" என்றார்.


Next Story