தேனியில் 66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு


தினத்தந்தி 21 Oct 2023 9:30 PM GMT (Updated: 21 Oct 2023 9:30 PM GMT)

தேனி ஆயுதப்படை மைதானத்தில் 66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நீத்தார் நினைவு பீடத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் மலர் வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தினர்.

தேனி

தேனி ஆயுதப்படை மைதானத்தில் 66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நீத்தார் நினைவு பீடத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் மலர் வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தினர்.

வீரவணக்க நாள்

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பணியின்போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, தேனி ஆயுதப்படை போலீஸ் கவாத்து மைதானத்தில் நேற்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள நீத்தார் நினைவு பீடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்த நினைவு பீடத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

66 குண்டுகள்

அவர்களை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ஆனந்த், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பார்த்திபன், கீதா, ராமலிங்கம், பெரியசாமி, கருணாகரன், ஊர்க்காவல் காவல் படை உதவி சரக தளபதி அஜய்கார்த்திக் ராஜா மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மலர் வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், போலீசார் அணிவகுத்து நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, 66 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள், வீரமரணம் அடைந்த போலீசாரின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு இளமாறன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.


Next Story