பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின்வாரிசுதாரர்கள் 7 பேருக்கு வேலை


பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின்வாரிசுதாரர்கள் 7 பேருக்கு வேலை
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கு பணிநியமன ஆணையை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

குறைதீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் தொடர்பாக 270 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அரசு பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய அரசு பணிகளுக்கான நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

இலவச மனைப்பட்டா

மேலும் வருவாய்த்துறை சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா நெய்வனை கிராமத்தை சேர்ந்த இந்து ஆதியன்(பூம்பூம் மாட்டுக்காரன்) இனத்தை சேர்ந்த 2 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்த 4 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, கள்ளக்குறிச்சி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் 7 பேருக்கு தூய்மை பணியாளர்களுக்கான நலவாரிய அட்டை, தமிழ்நாடு மாநில நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, கவிதை போட்டி, இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற 10 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை அவர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலர் தீபிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், தாட்கோ மேலாளர் ஆனந்தகோகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story