வல்லம் பஸ் நிலையம் வழியாக இயக்காத 5 பஸ்கள் மீது நடவடிக்கை


வல்லம் பஸ் நிலையம் வழியாக இயக்காத  5 பஸ்கள் மீது நடவடிக்கை
x

இரவு நேரங்களில் வல்லம் பஸ் நிலையம் வழியாக பஸ்களை இயக்காமல் புறவழிச் சாலை வழியாக இயக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து 5 பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

தஞ்சாவூர்

இரவு நேரங்களில் வல்லம் பஸ் நிலையம் வழியாக பஸ்களை இயக்காமல் புறவழிச் சாலை வழியாக இயக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து 5 பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

பொதுமக்கள் புகார்

தஞ்சை அருகே உள்ளது வல்லம். தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள இந்த ஊர் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் திருச்சியில் இருந்தும் தஞ்சை வரும் தனியார் மற்றும் அரசு பஸ்களும் வல்லம் வழியாகத்தான் தஞ்சைக்கு வந்து செல்கின்றன.

ஆனால் இந்த பஸ்கள் பகல் நேரத்தில் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகிறது இரவு நேரங்களில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வல்லம் பஸ் நிலையம் வழியாக செல்லாமல் புறவழிச் சாலை வழியாகவே சென்று வருவதாக பொதுமக்கள் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார் அளித்தனர்.

5 பஸ்கள் மீது நடவடிக்கை

இதையடுத்து கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் வல்லம் புறவழிச் சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 3 தனியார் பஸ்களும், 2 அரசு பஸ்களும் வல்லம் பஸ் நிலையம் வழியாக செல்லாமல் புறவழிச்சாலை வழியாக சென்றன. இதையடுத்து அந்த 5 பஸ்களையும் வழிமறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தணிக்கை சான்று வழங்கியதோடு வல்லம் நகர் வழியாக செல்லுமாறு உத்தரவிட்டனர்.

மேலும் அந்த 5 பஸ்களுக்கும் அபராதம் விதிப்பது தொடர்பாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.


Next Story