உணவகங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை
சவர்மா சாப்பிட்டு சிறுமி பலி எதிரொலியால் கரூரில் உணவகங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
உணவகங்களில் சோதனை
நாமக்கல் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மேலும் 43 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்படி கரூரில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியன் தலைமையில், கரூர் உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன் உள்ளிட்ட அதிகாரிகள் கரூரில் உள்ள சிக்கன், மட்டன், சவர்மா விற்பனை செய்யும் கடைகள், ரெஸ்டாரெண்ட் உள்ளிட்ட உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சிக்கன், உணவுகள், பயன்படுத்தும் எண்ணெய், மசாலா பொருட்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். அப்போது வேகவைத்த சிக்கன்கள் பிரிட்ஜில் இருந்ததை கண்டுபிடித்து அதனை குப்பை தொட்டியில் கொட்டினர்.
25 கடைகள்
வேகவைத்த சிக்கன் உணவு பொருட்களை மீண்டும் பிரிட்ஜில் வைத்து பொதுமக்களுக்கு வழங்க கூடாது என ஓட்டல் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் உணவு மற்றும் உணவு பொருட்கள் பற்றிய புகார் தொடர்பான நோட்டீஸ்களை கடைகளில் ஒட்டி சென்றனர். இந்த சோதனையானது கரூரில் 25 கடைகளில் நடத்தப்பட்டது. இதில் 8 கிலோ சிக்கன் கைப்பற்றி அகற்றப்பட்டன. பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த 2 கடைகளுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன.
5 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 2 கடைகளில் இருந்த உணவு பொருட்கள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் உணவு மற்றும் உணவு பொருட்கள் பற்றிய புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் எனவும், இந்த சோதனையானது மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று, நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குளித்தலை
குளித்தலை பகுதியில் உள்ள ஓட்டல்களில் நகராட்சி ஆணையர் நந்தகுமார் சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் ஒரு ஓட்டலில் திறந்த வெளியில் தொங்க விடப்பட்டிருந்த 5 கிலோ எடை கொண்ட கோழி கறிகளை பறிமுதல் செய்தனர். அதுபோல கேரி பேக் எனப்படும் நெகிழிப்பை பயன்படுத்தியதற்காக ரூ.ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். அதுபோல மற்றொரு ஓட்டலில் பாதுகாப்பற்ற முறையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நண்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
அரவக்குறிச்சி
பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் பால்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முனிராஜ், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் இஸ்மாயில் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உணவகங்களில் வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தரமற்ற சிக்கன், தரமற்ற 15 கிலோ ரொட்டி துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. தரமற்ற உணவுப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை செய்தனர்.