13 பேரை பலி வாங்கிய பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு


13 பேரை பலி வாங்கிய பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு
x

சிவகாசி அருகே 13 பேரை பலி வாங்கிய பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட மங்களம் வருவாய் கிராமத்தில் உள்ள ரெங்கபாளையம் கிராமத்தில் திருத்தங்கல் கங்காகுளத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மற்றும் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது அங்கு பணியில் இருந்து 12 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ஹரிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் ஆலையின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி (வயது43), அவரது மனைவி காளீஸ்வரி, மேலாளர் கனகு, மாதிரி பட்டாசுகளை வெடித்த ராம்குமார், ஜெயமுருகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுந்தரமூர்த்தி, கனகு, ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் பட்டாசு கடை வெடி விபத்துக்கு என்ன காரணம்? என ஆய்வு செய்ய கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தம், தொழிலாளர் நலத்துறை, தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு கடை மற்றும் அதன் அருகில் உள்ள பட்டாசு ஆலைக்கு சென்று வெடி விபத்து நடக்க என்ன காரணம்? தொழிலாளர்கள் எப்படி சிக்கிக்கொண்டார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் குழு மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை தர உள்ளது.


Next Story