வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரைக்கடைகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவு
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரைக்கடைகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அகற்ற உத்தரவு
வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.53 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதனை 9 மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு ஏராளமான கடைகள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கடைகளை ஏலம் விடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் அங்கு சில வியாபாரிகள் தரையில் தண்ணீர்பாட்டில், தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
மேலும் ஆங்காங்கே பழக்கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அங்கு திடீரென சென்று அந்த தரைக்கடைகளை அகற்ற வேண்டும் என்று கூறினர். உடனடியாக காலி செய்ய முடியாது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். ஓரிரு நாட்களில் கடைகளை காலிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
அனுமதிக்க வேண்டும்
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய அனுமதி பெற்று கடை வைத்துள்ளோம். திடீரென கடைகளை காலி செய்தால் மக்கள் சிரமப்படுவார்கள். இங்கு கட்டப்பட்டுள்ள கடைகளும் முழுமையாக ஏலம் விடப்படவில்லை. எனவே கடைகள் ஏலம் விடும் வரை நாங்கள் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.