மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள், பஸ்சுடன் விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்


மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள், பஸ்சுடன் விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்
x

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள், பஸ்சுடன் விடுதிக்கு அதிகார்கள் சீல் வைத்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது வெண்ணை உருண்டை பாறை புராதன சின்னம். இதன் எதிரில் உள்ள ஒரு தனியார் விடுதி நிர்வாகத்தினர் தங்கள் விடுதியில் சேரும் குப்பைகளை குப்பை வண்டியில் கொட்டாமல், சாலையில் கொட்டி அசுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் உள்ள பகுதியாகவும், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் உள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் செய்தனர்.

இதையடுத்து மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் உத்தரவின்பேரில் மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் மற்றும் அதிகாரிகள்; பல முறை எச்சரித்தும் அந்த பகுதி சாலையில் குப்பை கொட்டி அசுத்தம் செய்ததாக அந்த தனியார் விடுதியின் பிரதான நுழைவு வாயிலை 2 சுற்றுலா பஸ், அதில் வந்த சுற்றுலா பயணிகளுடன் சேர்த்து துப்புரவு அதிகாரிகள் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.

நுழைவு வாயில் கதவு சீல் வைக்கப்பட்டதால் உள்ளே இருந்த சுற்றுலா பயணிகள் வெளியே வரமுடியாமலும், வெளியில் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க சென்று திரும்பி வந்த பயணிகள் விடுதிக்கு உள்ளே செல்ல முடியாமலும் சாலையில் காத்திருந்ததை பார்க்க முடிந்தது. மதுரை மாவட்டத்தில் இருந்து 2 பஸ்களில் வந்திருந்த அந்த பயணிகள் பேரூராட்சி துப்புரவு அதிகாரிகளிடம் நாங்கள் அடுத்து ராமேஸ்வரத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்றும், விடுதி நுழைவு வாயில் சீலை அகற்றி எங்களையும் எங்கள் பஸ்சையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேசினர்.

1 மணி நேரம் கழித்து சுற்றுலா பயணிகளின் சிரமத்தை உணர்ந்து, அவர்களின் கோரிக்கையை ஏற்ற பேரூராட்சி அதிகாரிகள்அந்த சீலை அகற்றி சுற்றுலா பஸ், சுற்றுலா பயணிகளை விடுவித்தனர். பின்னர் அந்த பஸ்சில் ஏறி மதுரை மாவட்ட சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் நோக்கி சென்றனர். பின்னர் சீல் அகற்றப்பட்ட அந்த விடுதிக்கு பொது இடத்தில் குப்பை கொட்டி அசுத்தம் செய்ததாக பேரூராட்சி நிர்வாகம் ரூ.1000 அபராதம் விதித்தது.


Next Story