சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர், சாலமன் தெருவைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம் (வயது 80). இவர் நேற்று முன்தினம் தேவாலயம் செல்வதற்காக முருகேசன் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்ேபாது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஞானபிரகாசம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஞானபிரகாசம், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் ஞானபிரகாசம் மீது மோதிய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது சிறுவன் என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர், பள்ளிக்கரணையில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். கடை அருகிலேயே தங்கி இருந்தார். பள்ளிக்கரணை பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வேளச்சேரி மெயின் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.